அடுத்த 20 மாதங்களில்
3,000 ஏ.டி.எம்.களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம்
அடுத்த 20 மாதங்களில் 3,000 ஏ.டி.எம். மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் இது குறித்து கூறுகையில், “சென்னை, பெங்களூர், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இவ்வாண்டு பிப்ரவரி 5-ந் தேதி மூன்று ஏ.டி.எம். மையங்கள் தொடங்கப்படும். இதன் பிறகு படிப்படியாக ஏ.டி.எம். மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சேமிப்பு திட்டங்கள்
அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள முதலீடு ரூ.6.05 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்ட முதலீட்டில் 50 சதவீதமாகும். அதேசமயம், தனியார் துறையில் முன்னிலை வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்திய அஞ்சல் துறைக்கு 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 90 சதவீத கிளைகள் கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த சேமிப்பு கணக்கு டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தற்போது காசோலை வசதியும் வழங்கப்படுகிறது.
வங்கிச் சேவை
வங்கிச் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இந்த வகையில் இந்தியாவிலேயே அஞ்சல் துறைக்குத்தான் அதிக ஒருங்கிணைப்பு வசதி உள்ளது. புதிதாக வங்கிச் சேவையில் களமிறங்குவதற்காக பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அஞ்சல் துறையும் ஒன்றாகும். இச்சேவையில் ஈடுபடுவதற்கு தேவைப்படும் ரூ.623 கோடி நிதியைப் பெற நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற அஞ்சல் துறை முயற்சித்து வருகிறது.