WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

4 ஆகஸ்ட், 2012

Com KVS

                                                                      NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப் - C
தமிழ் மாநில மகிளா கமிட்டி சென்னை - 600 002
ஏஞ்சல் சத்தியநாதன் தலைவர் R.மணிமேகலை கன்வீனர்


சுற்றறிக்கை எண் : TNMSC -06                                                     தேதி : 05.08.2012

அன்புத் தோழியர்களே, அருமைத் தோழர்களே! வணக்கம்.

தொழிற்சங்கப் பணிகளுக்கு இலக்கணமாய்த் திகழும்,
அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர்
அறிவுஜீவி தோழர் KVS அவர்களுக்கு
அரசுப் பணிநிறைவு பாராட்டு

பலன் கருதாது கடமையை சரியாகச் செய்து வந்தால்
தக்க பதவிகளும், புகழும் தானே தேடி வரும் - நிலைத்தும் நிற்கும்

கிளைச் சங்கத்தில் சீரிய செயல்பாடு:
            ஆறு லட்சம் ஊழியர்களைக் கொண்ட அஞ்சல் துறையில் 1973-ல் செங்கல்பட்டில் தோழர் KVS அவர்கள் எழுத்தராக பணியில் சேர்ந்தார். NFPE இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு NFPE -ன் தீவிர உறுப்பினரானார். செங்கல்பட்டு கோட்டத்திலிருந்து தாம்பரம் கோட்டம் பிரிந்தபோது அம்பத்தூரில் பணிபுரிந்து 1976-ல் அம்பத்தூர் கிளை உருவாக பாடுபட்டவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். 1979-ல் அம்பத்தூர் கிளைச் செயலராக தேர்வானார். கிளைச் செயலராக இருந்தபோது இவர் ஆற்றிய தொழிற்சங்கப் பணிகளும், காட்டிய தீவிரமும் இவரை சிறந்த செயலராக தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது. அப்போதே இவர் "வெற்றி முரசு" என்ற மாத இதழை தொழிற்சங்கம் வளர்க்கும் அதே வேளையில் இலாக்கா விதிமுறைகளை அறிந்துகொண்டு ஊழியர்கள் திறம்படப் பணிபுரிய உதவும் பத்திரிகையாக வெளியிட்டார். இவரது "வெற்றி முரசு" தமிழகம் முழுவதும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. செயலர் பதவியைத் தொடர்ந்து 1987-ல் அம்பத்தூர் கிளையின் தலைவராக உயர்ந்தார் .

மாநில சங்கத்தில் மகத்தான செயல்பாடு:
                                    1993-ல் மாநிலச் சங்க பொறுப்புகள் பல ஏற்று, மாநிலச் சங்க செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தார். மாநிலச் செயலரோடு இணைந்து செயல்பட்டார். அக்டோபர் 2003-ல் நடைபெற்ற திண்டுக்கல் மாநில மாநாடு தமிழ் மாநிலச் சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை மாநாடாக அமைந்தது. ஆம்! அந்த மாநாட்டில்தான் தோழர் KVS அவர்கள் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் மாநாட்டிலும் தொடர்ந்து மாநிலச் செயலராக தேர்வானார். பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து போராட்டக் களங்கள் அமைத்துப் போராடி GDS ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு ஊழியர்களும் பயன்பெற பாடுபட்டார். மாநிலச் சங்க மாத ஏடான "அஞ்சல் முழக்கம்" இதழ்களை புதுப் பொலிவுடன் காலம் தவறாது வெளியிட்டார். அவை   அஞ்சல் அதிகாரிகளும் பயன்படுத்தும் புத்தகமாக அனைத்து கருத்துக்களும் கொண்டதாக திகழ்ந்தது. மாநிலச் செயலராக இருந்தபோது அகில இந்தியாவே தமிழ் மாநிலத்தை திரும்பிப் பார்க்கும் படியாக இவரின் செயல்பாடுகள் இருந்தது என்றால் மிகையாகாது. இவரது பேச்சில் பாண்டியன் வாள் வீச்சின் வேகமும் - லாவகமும், எழுத்தில் பல்லவன் வடித்த சிற்பத்தின் நேர்த்தியும்-நுணுக்கமும் காணப்பெறும். அதனால் தொழிலாளர் விரோத அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.


அகில இந்திய சங்கத்தில் ஆற்றல்மிகு செயல்பாடு:

                    2006-ம்    ஆண்டு    இறுதியி ல்  நடைபெற்ற  ஜுவாலாமுகி அகில இந்திய  மாநாட்டில்,      பொதுச்     செயலராக      பல      எதிர்பார்ப்புகளுக்கு      இடையில்  தேர்வானார்.   பரபரப்பாக  பேசப்பட்ட  ஆறாவது  ஊதியக்   குழுவிற்கு தொழிற் சங்கத்தின் சார்பாக சிறப்பானதொரு கோரிக்கை மனுவினை அளித்து அவற்றில் பல, ஊதியக் குழு பரிந்துரைகளில் இடம்பெற பாடுபட்டார். பொதுச் செயலராக தேர்வான சில நாட்களிலேயே சவாலாக அமைந்த இப்பணி இவருக்கு அழியாப்புகழும், பெருமையும் தேடித்தந்தது. மத்திய சங்கத்தை மிக்க துடிப்புடன் வழி நடத்தியதைக்கண்டு ஒப்பற்ற பொதுச் செயலரைக் கொண்ட இயக்கம் என்று ஊழியர்கள் பெருமிதம் கொண்டனர். சுறுசுறுப்பைப் பற்றி தேனீக்களும் இவரிடம் பாடம் கற்க வேண்டும்! தொடர்ந்து, குண்ட்டூர் (AP) மற்றும் ஆலந்தி - பூனா ஆகிய அகில இந்திய மாநாடுகளிலும் பொதுச் செயலராக தேர்வானார்.




போர்வாளாக வெளிப்பட்ட பத்திரிகை - வலைதளம்     

           மாநிலச் செயலர்கள் மற்றும் CHQ பொறுப்பாளர்கள் மட்டுமல்லாது அடிப்படை உறுப்பினர்களுக்கும் கூட இவர் நெருக்கமானவர். எனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். அகில இந்தியாவை தன் அன்புக் கரங்களால் அரவணைத்து தொழிற் சங்கத்தை எஃகு கோட்டையாக்கினார். அனைத்து தரப்பு ஊழியர்களும் இலாக்காவின் அன்றாட நிகழ்வுகளையும், தொழிற் சங்க செயல்பாடுகளையும் உடனுக்குடன் நேரடியாகவே அறிந்துகொள்ள வலைதளத்தை திறம்படபயன்படுத்தினார். இன்று பல லட்சம் ஊழியர்கள் அன்றாடம் வலைதளத்தைப் பார்த்து தொழிற்சங்க அனைத்து நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள முடிகிறதென்றால் அதற்கு முழு முதற் காரணம் தோழர் KVS அவர்களின் அயராத உன்னத உழைப்பே. மத்திய சங்க மாத ஏடான "பாரதீய போஸ்ட்" இதழில் சிறந்த தலையங்கங்கள்,  கருத்து மிக்க கட்டுரைகள், நீதிமன்ற தீர்ப்புகள், வாசகர் பகுதி, இலாக்கா  விதிமுறைகள் பகுதி என அனைத்து விவரங்களையும் கண்கவர் வண்ணத்தில்  அனைவரும் பயன்பெற வெளியிட்டார். 



தடைக்கற்களும் படிக் கற்களாயின:

               இவர் பொதுச் செயலராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு இடர்பாடுகள், முட்டுக்கட்டைகள், பல்வேறு நீதிமன்ற வழக்குகள். இவை அனைத்தையும் இன்முகத்தோடு எதிர்கொண்டு அவற்றை தடைக் கற்களாக கருதாமல் முன்னேற்றத்திற்கான படிக் கற்களாக மாற்றிய பாங்கு இவருக்கே உரிய தனிச் சிறப்பு. தொழிற் சங்கப் பணிகளுக்கு இடையூறு  ஏற்படுத்த திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றத்தையும், இயக்கத்திற்கு ஏற்றத்தையும்  தேடித் தந்தார். சில ஓட்டைக் கைகள் ஒன்று சேர்ந்தா ஒளிவீசும் சூரியனை மறைக்க முடியும்? சூழ்ச்சிகள் பல செய்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை நிறுத்த முடியுமா?



அறிவிற்கு விருந்தாகும் - புத்தகங்கள்:         

            இவ்வளவு பணிச் சுமைகளுக்கிடையே சிறிதும் ஓய்வறியாது, இவர் வெளியிட்ட பயனுள்ள புத்தகங்கள்தான் எத்தனை! எத்தனை!! இலாக்கா விதிகள், சட்ட ரீதியான விளக்கங்கள், தொழிற்சங்க நெறிமுறைகள் ஆகியவற்றை அனைவரும் நன்கு அறிந்து கொண்டு சிறந்த பணியாளர்களாக திகழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், வெற்றி முரசு, வெற்றி முரசின் வெற்றிப் படிகள், Venture Hand Book 2010, 2011, 2012, GDS Crusader, GDS Refresher, Postman Guide என்று பல்வேறு புத்தகங்கள் வெளியிட்டார். தொழிற் சங்க "அறிவு ஜீவி" என்ற பெயர் பெற்றார். இன்று இவரின் பல புத்தகங்கள் இலாக்கா தேர்வுகளுக்கு படிப்போருக்கு மட்டுமல்லாது, உயரதிகாரிகளும் பயன்படுத்தும் புத்தகமாக விளங்குகின்றது என்றால் மிகையாகாது. அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராயினும் இவர் அஞ்சல் நான்கு மற்றும் GDS ஊழியர்கள் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டார் - தனிக்கவனம் செலுத்தினார்.

கூட்டு ஆலோசனைக் குழு (JCM)மற்றும் சம்மேளனத்தில் செயல்பாடுகள்:     
            JCM (Departmental Council) என்ற இலாக்கா கூட்டு ஆலோசனைக் குழு நீண்ட காலமாக செயல்படாமல் இருந்தது. தோழர் KVS அவர்கள் பொதுச் செயலரான பிறகு JCM புதுப்பிக்கப்பட்டது. அதில் Staff Side Leader என்ற முறையில் பல்வேறு தேங்கிக் கிடந்த பிரச்சனைகளை தீர்த்துவைத்தார். அப்போதைய மாபொதுச் செயலர் தோழர் K.ராகவேந்திரன், தற்போதைய மாபொதுச் செயலர் தோழர் M.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு சம்மேளனத்தின் மூலமாக பல்வேறு ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. சோர்வடையாது, கண்துஞ்சாது, அயராது உழைக்கும் இவரோடு, மாலை வரை போட்டியிட்டு தோற்றுப்போன சூரியனும் சோர்வுற்று இரவில் ஓய்வெடுக்கச் சென்றுவிடும்! தோழர் KVS அவர்கள் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரான பிறகு சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்களிடையே மிகப்பெரிய ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது. FNPO-உடன் JCA அமைத்தும், NFPE மட்டும் தனித்தும், பல போராட்டங்கள் நடத்தி பல்வேறு வெற்றிகள் குவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தில் துணைத் தலைவராக பணிபுரிந்து மகா சம்மேளனத்தில் பல ஆணித்தரமான –ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அஞ்சல் ஊழியர் உயர்விற்காக பல்வேறு கோரிக்கைகளை தன்னுடைய வாதங்களாலும், அயராத உழைப்பாலும் தீர்த்து வைத்தார்.




கேடர் சீரமைப்பு - அரசுக்கு முன்வடிவு அளிப்பு:               

         அஞ்சல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தும் பதவி உயர்வு மற்றும் சரியான விகிதத்தில் ஊதிய உயர்வு ஏதுமின்றி எழுத்தராய்ச் சேர்ந்தவர்கள் எழுத்தராகவே ஓய்வு பெறும் அவல நிலை நீங்க கேடர் சீரமைப்பு ஒன்றே வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில், உடனடியாக கேடர் சீரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான திட்ட முன்வடிவினை தக்க முறையில் தயாரித்து இலாக்காவிற்கு இவர் அளித்துள்ளார். விரைவில் கேடர் சீரமைப்பு செய்யப்பட தொடர்ந்து பாடுபட்டும் வருகின்றார்.



இமாலயச் சாதனைகள்:                                                                                                                      
       இவர் காலத்தில் அடிப்படை உறுப்பினர்களுக்கும் பொதுச் செயலருக்குமான இடைவெளி இல்லாமல் போனது. அனைத்து மாநிலச் சங்க பொறுப்பாளர்களும்,  அடிப்படை உறுப்பினர்களும் KVS என்ற மூன்றெழுத்திற்கு கட்டுப்பட்டனர்.இவரும் சக தோழனைப் போல் அனைவரிடமும் எவ்வித பாகுபாடுமின்றி பண்புடன் பழகினார். இவரது சிந்தனையும் செயல்பாடுகளும் எப்போதும் அஞ்சல் ஊழியர் நலன் மற்றும் இயக்க முன்னேற்றம் பற்றியதாக மட்டுமே இருந்ததே தவிர, ஒரு போதும் தன்நலம் தன் குடும்பநலம் பற்றி இவர் அதிகம் சிந்தித்ததாகத் தெரியவில்லை! நம் துறையில் 2000 முதல் மறைக்கப்பட்டு வந்த, நிரப்பப்படாமல் இருந்த பணியிடங்கள் மற்றும் விடுபட்ட காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நம் தோழர் KVS அவர்கள் பொதுச்செயலரானதும் தோண்டி எடுத்து, ஆராய்ந்து, தொடர்ந்து வலியுறுத்தி சுமார் 16,000 எழுத்தர் பணியிடங்களை நிரப்பிடச் செய்தது இமாலயச் சாதனையாகும். இதுமட்டுமா! LSG, HSG -II, HSG –I பணியிடங்கள் முறையாக நிரப்பப்பட்டது. இலாக்கா தேர்வுமுறைகள் இவரின் பெரு முயற்சியால் எளிமையாக்கப்பட்டதால், தேர்வுக்குச் சென்ற ஊழியர்கள் பெருவாரியாக தேர்ச்சி பெற்று அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டது. மேலும் திடீரென்று 9797 அஞ்சலகங்கள் மூடப்படும் என்ற அதிர்ச்சியான உத்தரவு வந்ததைக் கண்டு வெகுண்டெழுந்து, அதை எதிர்த்து இவர் உடனடியாக எச்சரிக்கைக் குரல் கொடுத்ததன் விளைவாக அந்த மூடுவிழாத் திட்டம்தடுக்கப்பட்டது - கைவிடப்பட்டது.




சுழலும் பூமிக்கும் ஓய்வா?                 

                         அகவை 60 ஆனதனால் இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அஞ்சல் ஊழியர் அனைவரின் அன்பிற்கு பாத்திரமாக இதயத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கும் தோழர் KVS அவர்கள் தொடர்ந்து தொழிற் சங்கப் பணிசெய்து அஞ்சல் ஊழியர் நலம் காண துணை நிற்க வேண்டும். லட்சத்தில் ஒருவர் தான் தோழர் KVS அவர்களைப் போல் கிடைக்கப்பெறுவர். இவருக்கு நிகர் இவரே! இவரின் அருமை – பெருமைகளை இரண்டு பக்கத்திற்குள் விவரிக்க எத்தனிப்பது ஆழ் கடல் நீரை படி கொண்டு அளக்க முற்படுவதற்கு ஒப்பாகும். இனி தோழர் KVS அவர்களைப் போல் இன்னொரு பொதுச் செயலர் கிடைப்பாரா? என்ற ஏக்கம் பிறக்கிறது! காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம் எதிர்பார்ப்புடன்!
                                                                                                                                                                     
                                                                 என்றென்றும்   நன்றியுடன்,   

                                                                                                                                                                                                                     
                                                                                                          R.மணிமேகலை-கன்வீனர்
                                                                                                                           9003065778
                                                                              (கருத்தாக்கம் - காசி) 
                                                                                                                 
                                                                                        




கருத்துகள் இல்லை: